உலர் கழிவை தனியாக பிரித்து வழங்கும் திட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில், உலர் கழிவை தரம் பிரித்து வழங்கும் திட்டம், இன்று முதல் துவக்கப்படுகிறது. இனி, புதன்கிழமை தோறும், வீட்டுக்கு வரும் துப்புரவு ஊழியர்களிடம், பகுதிவாசிகள் பிளாஸ்டிக் கழிவை தர வேண்டும்.

தரம் பிரிக்காமல் அவற்றை வழங்கினால், 10 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில், 450 தெருக்கள் உள்ளன.

தினமும், 26 டன் குப்பை கழிவுகள் சேகரமாகின்றன. 60 சதவீதம் மக்காத குப்பையும், 40 சதவீதம் மக்கும் கழிவுகளும் கிடைப்பதால், குப்பையை உரமாக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த, நுங்கம்பாக்கம் கிராமத்தில் உரக்கிடங்கு அமைக்கும் பணியை, நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது.

இதற்கு முன்னோட்டமாக, உலர் கழிவை தரம் பிரித்து, பொதுமக்களிடம் இருந்து பெறும் திட்டம், இன்று முதல், நகராட்சியில் நடைமுறைக்கு வருகிறது.

இதன்படி, தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பையில், பிளாஸ்டிக் குப்பையை மட்டும் தரம் பிரித்து வைத்திருக்க வேண்டும்.

பொதுமக்கள் வீடுகளுக்கு, புதன்கிழமை தோறும் வரும் துப்புரவு பணியாளர்களிடம் பிளாஸ்டிக் குப்பையை வழங்க வேண்டும்.

தரம் பிரிக்காத குப்பையை பகுதிவாசிகள் வழங்கினால், 10 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என, நகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

இதற்காக, நகராட்சி ஆணையர் செந்தில்குமரன் தலைமையில், துப்புரவு அலுவலர் கோவிந்தராஜ், பொறியாளர் உமா மகேஸ்வரி மற்றும் நகராட்சி அலுவலர்கள், துப்புரவு ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்தனர்.

மேலும், துாய்மை இந்தியா திட்டம் மற்றும் குப்பை பிரித்து பெறப்படும் திட்டம் குறித்து, விழிப்புணர்வு பதாகைகளையும் வைத்துஉள்ளனர். இன்று காலை முதல், இத்திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது.

வீடுகளில் சேகரமாகும் குப்பை கழிவுகளில், தரம் பிரிக்கப்பட்ட குப்பையை பெற, புதன்கிழமை தோறும், துப்புரவு ஊழியர்கள் வருவர்.

இன்று முதல் இது நடைமுறைக்கு வருகிறது. அடுத்த ஒரு மாதத்திற்குள், மக்கும் குப்பை கழிவுகளும் தரம் பிரித்து பெறப்படும்.

நகரவாசிகள், துப்புரவு ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து, திருவள்ளூர் நகரை சுத்தமானதாக மாற்ற முன்வர வேண்டும்.எஸ்.செந்தில்குமரன் ஆணையர், திருவள்ளூர் நகராட்சி

செயல்படுவது எப்படி?

திருவள்ளூர் நகராட்சியின், 27 வார்டுகளில், முதற்கட்டமாக, நான்கு முதல், 16 வார்டுகள் வரை, உலர் கழிவு தனியாக பிரித்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மற்ற வார்டுகளில், படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.

இந்த வார்டுகளில் உள்ள, 37 துப்புரவு ஊழியர்கள், 37 தள்ளு வண்டிகள் மூலம், வீடு, வீடாகச் சென்று பிரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவை பெற்றுச் செல்வர்.

சேகரமாகும் பிளாஸ்டிக் குப்பை, நகராட்சி நிர்வாகம் ஒதுக்கிய ஐந்து இடங்களில் ஒன்று சேர்க்கப்படும்.

பழைய பேப்பர் வாங்கும் வியாபாரிகளை வரவழைத்து, மறு சுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் குப்பை விற்பனை செய்யப்படும். விற்பனையாகும் பணம், துப்புரவு ஊழியருக்கே வழங்கப்படும்.

பச்சை, நீல தொட்டி முறைதிருவள்ளூர் நகராட்சியில், மக்கும் மற்றும் மக்காத குப்பையை தரம் பிரித்து வழங்க, பச்சை, நீல தொட்டி முறை அமல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி, எந்த கலர் தொட்டியில், எந்த வகை குப்பை கொட்ட வேண்டும் என, நகராட்சி அறிவித்து உள்ளது.

அதன் விபரம்:

பச்சை நிற தொட்டி: மக்கும் குப்பை (புதன்கிழமை தவிர்த்து இதர நாட்களில் பெறப்படும்)

உணவு கழிவுகள், பழக் கழிவுகள் காய்கறி, மலர் கழிவுகள் இறைச்சி வகைகள், முட்டை ஓடு தோட்ட கழிவுகள்

நீல நிற தொட்டி: மக்காத குப்பை (புதன்கிழமை தோறும் பெறப்படும்) பிளாஸ்டிக், பாலிதீன் பைகள், கண்ணாடி பொருட்கள் தெர்மாகோல், பேப்பர் அட்டை, பழைய இரும்பு பழைய துணி, மர பொருட்கள் ரப்பர் மற்றும் தோல் பொருட்கள் மின்சாதன கழிவுகள்

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments