சிவகங்கை மாவட்டத்தில் தாகத்தால் தவிக்கும் கிராமங்கள்

சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், மானாமதுரை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் இணைப்பு வழங்காமல் பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவியதையடுத்து கடந்த திமுக ஆட்சியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது.

இதன் மூலம் இம்மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராமப்பகுதிகள் பயனடைந்து வருகின்றன.

தொடர்ந்து 2011ம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை நகராட்சி, திருப்புத்தூர், இளையான்குடி, திருப்புத்தூர் பேரூராட்சி மற்றும் காளையார்கோவில் அருகில் உள்ள கிராமப்பகுதிகள் இணைக்கப்பட்டன.

இதுபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் சில பகுதிகளும் இத்திட்டத்தில் பயன்பெற்று வருகின்றன. தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை இத்திட்டத்தில் இணைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கணக்கெடுப்பு பணி நடந்தது.

இதில் சில பகுதிகள் மட்டும் இணைக்கப்பட்டன. ஆனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு உள்ள பல்வேறு பகுதிகள் இணைக்கப்படாமல் உள்ளன.

கடந்த 2013ம் ஆண்டு திருப்புவனம், மானாமதுரை பகுதிகளில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட கணக்கெடுப்பு பணி நடந்தது. பல்வேறு வழித்தடங்களில் கணக்கெடுப்பு செய்து திட்ட மதிப்பீடும் அரசுக்கு அனுப்பப்பட்டது.

ஆனால், கணக்கெடுப்பு பணி நடந்து மூன்று ஆண்டுகள் முடிவடைந்தும் அடுத்தகட்ட பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இதுபோல் அதிகப்படியான குடிநீர் தட்டுப்பாடுள்ள இளையான்குடி, காளையார்கோவில், சிவகங்கை பகுதிகளில் அனைத்து கிராமங்களையும் இத்திட்டத்தில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மெயின் பைப் லைன் திருப்புத்தூர், கல்லல், காளையார்கோவில், மறவமங்கலம், இளையான்குடி வழியாக ராமநாதபுரம் செல்கிறது.

இதேபோல் காளையார்கோவிலிலிருந்து கொல்லங்குடி, நாட்டரசன்கோட்டை வழியே பைப் லைன் அமைக்கப்பட்டு சிவகங்கைக்கு காவிரி நீர் கொண்டு செல்லப்படுகிறது.

மெயின் பைப் லைன் செல்லும் வழியில் உள்ள ஊர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்படவில்லை.

இந்த திட்டத்தில் முதற்கட்டமாக கிராமங்கள் சேர்க்கப்பட்டபோது குடிநீர் பிரச்னை உள்ள பல ஊர்கள் இணைக்கப்படவில்லை. இதுபோல் மாவட்டம் முழுவதும் குடிநீர் பிரச்னையுள்ள ஏராளமான கிராமங்கள் விடுபட்டுள்ளன.

இதுகுறித்து சமூக ஆர்வலர்  சந்திரசேகரன் கூறுகையில், “ திட்டம் தொடங்கப்பட்ட காலத்திற்கு பிறகு இத்திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

நகராட்சிகள் மற்றும் சில கிராமங்களை தவிர மற்ற கிராமங்களுக்கு வேறு குடிநீர் திட்டங்கள் இல்லை. இதனால் தற்போது கோடை காலத்தில் கடும் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் சுகாதாரமற்ற குடிநீரால் நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, மேலும் காலம் தாழ்த்தாமல் ஏற்கனவே கணக்கெடுப்பு பணி முடிந்த ஊர்களுக்கு உடனடியாக குடிநீர் இணைப்பிற்கான பணிகளை தொடங்க வேண்டும்.

டிநீர் பிரச்னையுள்ள அனைத்து ஊர்களையும் இத்திட்டத்தில் இணைக்க வேண்டும்” என்றார்.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments