கத்தாருடன் தூதரக உறவு துண்டிப்பு: சவுதி உட்பட நான்கு நாடுகள் அறிவிப்பு

‘ஐ.எஸ்., உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவிப்பதுடன், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஈரானுடன் நெருக்கமாக இருப்பதால், மேற்காசிய நாடான கத்தாருடன் துாதரக உறவை துண்டித்துக் கொள்கிறோம்,” என, சவுதி அரேபியா உட்பட, நான்கு நாடுகள் நேற்று அறிவித்துள்ளன.

அதிக அளவு எண்ணெய் வளமுள்ள மேற்காசிய நாடான கத்தார், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு அளித்து வருவதாக, சவுதி அரேபியா, பஹ்ரைன், யு.ஏ.இ., ஆகிய வளைகுடா நாடுகளும், எகிப்தும் நீண்ட காலமாக குற்றஞ்சாட்டி வருகின்றன.

மேலும், ஷியா முஸ்லிம்கள் அதிகம் உள்ள, ஷியா ஆட்சியாளர்கள் உள்ள ஈரானுக்கு ஆதரவாகவும் கத்தார் செயல்பட்டு வருவதை, சன்னி முஸ்லிம்கள் அதிகம் உள்ள, சவுதி அரேபியா விரும்பவில்லை. இது தொடர்பாகவும் கத்தாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், கத்தார் தொடர்ந்து ஈரான் ஆதரவு நிலையிலேயே இருந்ததால், 2014ல், சவுதி அரேபியா, யு.ஏ.இ., பஹ்ரைன் ஆகியவை, கத்தாரில் இருந்த தங்களுடைய துாதர்களை திரும்பப் பெற்றன.

நீண்ட இழுபறிக்குப் பிறகு, மீண்டும் துாதர்களை அனுப்பி வைத்தன. இந்நிலையில், சமீபத்தில், ஈரானின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹசன் ரூஹானிக்கு, கத்தாரின் மன்னர்
தமிம் பின் ஹமது அல் தானி, வாழ்த்து கூறினார்.

இது, ஈரானை எதிரியாக பார்க்கும் சவுதி அரேபியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

சவுதி அரேபியாவுக்கு எதிராக, கத்தார் மன்னர் சில கருத்துக்களை கூறினார். இதை, அல் ஜசீரா உள்ளிட்ட கத்தாரில் இருந்து வெளியாகும், ‘டிவி’க்கள் வெளியிட்டன.

அதையடுத்து, சவுதி அரேபியா உள்ளிட்ட நான்கு நாடுகளும் அந்த, ‘டிவி’க்களுக்கு தடையும் விதித்தன.

இந்த நிலையில், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள், கத்தாருடனான துாதரக உறவை துண்டித்துக் கொள்வதாக நேற்று அறிவித்தன.

தங்கள் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு, கத்தார் மக்களுக்கு இரண்டு வார அவகாசம் அளித்துள்ளன. கத்தார் துாதர்களை, 48 மணி நேரத்துக்குள் வெளியேறவும் உத்தரவிட்டுள்ளன.

யு.ஏ.இ.,யின் விமான நிறுவனமான இதியாட் ஏர்வேஸ், எமிரேட்ஸ், பிளை துபாய் ஆகியவை, கத்தார் தலைநகர் தோகாவுக்கு இன்று முதல் விமான சேவை நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளன.

கத்தாரின் விமான நிறுவனமான, கத்தார் ஏர்வேஸ் விமானங்கள், தங்களுடையவான் பகுதியில் பறக்கவும் இந்த நாடுகள் தடை விதித்துள்ளன.

ஏமனில் நடந்து வரும் உள்நாட்டு போரில் ஈடுபட்டு வரும் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்
படையில் இருந்து, கத்தாரை விலக்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments