கந்த சஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் இன்று

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது.

இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்தவண்ணம் உள்ளனர். அறுபடை வீடுகளுள் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 31ம் தேதி துவங்கியது.

முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (5ம் தேதி) மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது.

மாலை 4.35 மணிக்கு கடற்கரையில் சூரனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்கிறார்.

தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. அதன் பின்னர் சுவாமியும், அம்பாளும் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி கிரிவீதியை வலம் வந்து 108 மகாதேவர் சன்னதியை அடைகின்றனர்.

அங்கு சுவாமி, அம்பாளுக்கு சாயாஅபிஷேகம் நடைபெறுகிறது. 7ம் திருநாளான நாளை (6ம் தேதி) அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் இதர கால பூஜைகள் நடக்கின்றன.

அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்பாள் தவசுக் காட்சிக்கு எழுந்தருளுகிறார். மதியம் 6 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது. தொடர்ந்து இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காண தமிழகத்தின் பல்வேறு ஊர்கள், இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர்.

பாதயாத்திரை பக்தர்களும் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் திருச்செந்தூர் நகர் முழுவதும் பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் ஒலிக்கிறது.

கடற்கரையில் காவல்துறை சார்பில் 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் சுமார் 1500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

[ad_2]

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments