கோவா திடீர் திருப்பம்

கோவா அரசியலில் திடீர் திருப்பமாக உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களைத் தொடர்ந்து கோவாவிலும் பாஜக ஆட்சியமைக்கிறது.

 

கோவா சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்றது.

ஆளும் பாஜக 13 இடங்களில் வென்றது. பாஜகவின் முன்னாள் கூட்டணி கட்சியான மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி (3), கோவா ஃபார்வர்டு கட்சி (3) ஆகியவை 6 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

சுயேச்சைகள் 3 இடங்களில் வென்றனர். தேசியவாத காங்கிரஸ் கட்சி ஓரிடத்தில் வெற்றி பெற்றது. 3 சுயேச்சைகளில் ஒருவர் பாஜக ஆதரவாளர் ஆவார்.

கோவா தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றபோதும், மாநிலத்தில் ஆட்சியமைக்கத் தேவையான 21 இடங்கள் அக்கட்சியிடம் இல்லை.

எனினும், பிற கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டது.

இந்நிலையில், 3 தொகுதிகளில் வெற்றி பெற்ற மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி (எம்ஜிபி), முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரை முதல்வர் பதவிக்கு பாஜக முன்மொழிந்தால் அக்கட்சி ஆட்சியமைக்க ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்தது.

இதேபோல், கோவா ஃபார்வர்டு கட்சியும் பாஜகவுடன் திடீர் பேச்சுவார்த்தை நடத்தியது. முதலில், பாஜக, காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளும் தங்களது கட்சியுடன் கூட்டணியமைப்பது தொடர்பாக மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அக்கட்சி தெரிவித்தது.

எனினும், பாஜக தலைவர்களுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை அக்கட்சி அதிகாரப்பூர்வமானபேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

அப்போது பாஜகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான கடிதத்தை அக்கட்சி அளித்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம், பனாஜியில் உள்ள பாஜக தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில், கோவா சட்டப் பேரவைக் கட்சித் தலைவராக மனோகர் பாரிக்கரை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து பாஜக ஆளுநரை சந்தித்து பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரியது. அதை ஏற்றுக் கொண்டு மனோகர் பாரிக்கரை கோவா முதல்வராக அந்த மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹா ஞாயிற்றுக்கிழமை நியமித்தார்.

மேலும், 15 நாள்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments