சீமை கருவேல மரங்களை அகற்ற விழிப்புணர்வு

திருப்பூர் மாவட்ட அளவில், 12 ஆயிரத்து, 532 ஏக்கர் பரப்பளவில், சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.

கோர்ட் வழிகாட்டுதலின்படி, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள், ரோட்டரி சங்கங்கள், சீமை கருவேல மரம் அழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

திருப்பூர் தெற்கு தாலுகாவில் உள்ள, 16 வருவாய் கிராமங்களில், 1,187 ஏக்கர் பரப்பில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.

தனியார் நிலத்தில், 460 ஏக்கர் அளவுக்கும், அரசு நிலத்தில், 727 ஏக்கர் அளவுக்கும், இது வளர்ந்துள்ளது.

இதுவரை, 150 ஏக்கர் பரப்பில் வளர்ந்திருந்த முட்செடிகள் அகற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, வேன் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அது குறித்த “ஆடியோ’வை, மாவட்ட நிர்வாகத்திடம் தெற்கு தாலுகா நிர்வாகம் சமர்ப்பித்து, ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு “ஆடியோ’வில்,”சீமை கருவேல மரங்கள், நிலத்தடி நீரை உறிஞ்சி வளர்வதால், விவசாயம் பாதிக்கப்படுகிறது; குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும், உடல்நலம் பாதிப்பு ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியாருக்கு சொந்தமான நிலத்திலும், வசிப்பிடங்களுக்கு அருகேயும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் நிலத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை, 10 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்.

இல்லையெனில், தனியார் நில உரிமையாளர் ஐகோர்ட் உத்தரவை மீறியதாக கருதி, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்று தெரிவிக்கப்படும்.

தாசில்தார் கோபாலகிருஷ்ணன் கூறுகையில்,””கலெக்டர் உத்தரவுப்படி, விழிப்புணர்வு “ஆடியோ’ தயாரித்து, கிராம மக்களுக்கு அறிவிப்பு செய்யப்படுகிறது.

இந்த ஆடியோவை, “வாட்ஸ் ஆப்’, “பேஸ் புக்’ போன்ற சமூகவலை தளங்களில் பதிவேற்றி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்,” என்றார்.

ரெயின்போ ரோட்டரி சார்பில், சீமை கருவேல மரங்கள் அகற்றுவது குறித்து, விழிப்புணர்வு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டது.

தாசில்தார் பாஸ்கரன், கொடியசைத்து துவக்கி வைத்தார். ரெயின்போ ரோட்டரி தலைவர் நடராஜன், செயலாளர் சுந்தரராஜன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த வாகனம், பல்லடம் வட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்று, சீமை கருவேல மரங்களால் ஏற்படும் தீமைகள் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்

அந்தந்த பகுதியிலுள்ள இளைஞர்கள், சீமைகருவேல மரங்களை அகற்ற ஒன்று சேர வேண்டுமெனவும், ரோட்டரி நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments