சூடு பிடிக்கும் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம்!

புதுக்கோட்டை(27 பிப் 2017): ஜல்லிக்கட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட மாணவர், இளைஞர் புரட்சியைப் போன்றே ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயுவுக்கு எதிரான போராட்டமும் சூடு பிடித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த 15-ந்தேதி தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது.

இந்த திட்டம் குறித்து முதலில் அறியாமல் இருந்த நெடுவாசல் மற்றும் வாணக்கன்காடு, கருக்காக்குறிச்சி, கோட்டைக்காடு கிராம மக்கள் பின்னரே பாதிப்புகள் குறித்து அறிந்தனர்.

இதையடுத்து கடந்த 16-ந்தேதி முதல் தங்கள் போராட்டத்தை நெடுவாசலில் தொடங்கினர். கிராம மக்களின் போராட்டம் சமூக வலை தளங்கள் மூலம் வேகமாக பரவியது. இதையடுத்து அவர்களின் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக நல அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

கடந்த 2 நாட்களாக தீவிரம் அடைந்துள்ள போராட்டம் நேற்று உச்சக்கட்டத்தை எட்டியது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உருவான தன்னெழுச்சி போராட்டம் போல் இயற்கை எரிவாயு திட்டத்திற்கு எதிராகவும் அனைத்து தரப்பினரும் ஒன்று திரண்டனர்.

குறிப்பாக இளைஞர்களும், மாணவர்களும் அதிக அளவில் களம் இறங்கினர். நேற்று புதுக்கோட்டை, நெடுவாசல், வாணக்கன்காடு, கோட்டைக்காடு ஆகிய 4 இடங்களில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் திருச்சி, கோவை, மதுரை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் குவிந்தனர்.

சென்னை ஐ.டி. கம்பெனியில் பணியாற்றி வரும் ஊழியர்கள், தேடல் அமைப்பினர், புதுச்சேரி கல்லூரி மாணவ, மாணவிகள் என பலர் திரண்டதால் போராட்ட களம் சூடுபிடித்துள்ளது.

திரைப்பட இயக்குனர்கள் தங்கர்பச்சான், பாண்டிராஜ் ஆகியோரும் போராட்டத்தில் கலந்து கொண்டு போராட்டக்காரர்களை ஊக்கப்படுத்தினர். ஜல்லிக்கட்டு போராட்டம் போல் இயற்கை எரிவாயுக்கு எதிரான போராட்டமும் வெற்றி பெறும் என்று முழக்கமிட்டனர்.

நெடுவாசல் கிராமத்திற்கு வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் வெள்ளையன் உள்பட பல்வேறு தலைவர்கள் நேரடியாக வந்து ஆதரவு தெரிவித்தனர்.

நெடுவாசலில் நடந்த போராட்ட களத்திற்கு வருகை தந்த திருமயம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ரகுபதி மெரீனாவில் ஏற்பட்டது போல் நெடுவாசலிலும் புரட்சி வெடிக்கும் என்று பேசினார். ஆலங்குடி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மெய்யநாதன் பேசுகையில், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்படும் வரையிலும், திட்டம் நிறைவேறாமல் தடுக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் தி.மு.க. எடுக்கும் என்றார்.

வழக்கமான போராட்டம் போல் இருந்துவிடாமல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர கிராம மக்களுடன் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கைகோர்த்துள்ளனர். இதற்காக சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப் மூலமாக தமிழகம் முழுவதிலும் இருந்து இளைஞர்களை திரட்டும் முயற்சியில் ஒரு குழு ஈடுபட்டுள்ளது.

அடுத்த கட்டமாக போராட்டத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் குறித்து இளைஞர்கள் கிராம மக்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் அரசியல் கட்சிகளை ஒதுக்கிவிட்டு ஜல்லிக்கட்டு போராட்டம் போல் நடத்தவும் அந்த குழு முடிவு செய்துள்ளது.

இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நல கூட்டணி சார்பில் ஆலங்குடியில் நாளை (28-ந் தேதி) ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் அந்தந்த கட்சிகளின் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.

ம.தி.மு.க. சார்பில் நாளை ஆலங்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசுகிறார். இன்று மதியம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு, ஆர்ப்பாட்டக்காரர்களிடம் ஆலோசனை நடத்துகிறார்.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments