சொந்த வீட்டுக்கு ஏழைகள் ஏக்கம்

கட்டுமான பொருட்கள் விலை உயர்வால்… கனவு இல்லம் ‘மணல் வீடு’ ஆகிறது! சொந்த வீட்டுக்கு ஏழைகள் ஏக்கம்

கோவை மாவட்டத்தில் மணல் உள்ளிட்ட, கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்து வருகின்றனர்.

ஏழை, நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீடு கட்டும் கனவு, மணல் வீடு போல் கலைகிறது.சென்னைக்கு அடுத்தபடியாக தொழில், கல்வி, கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில், கோவை சிறந்து விளங்கி வருகிறது.

மக்கள் தொகை பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கோவை நகரில் மட்டுமின்றி, புறநகர்களிலும் சில ஆண்டுகளாகவே தனி, அடுக்குமாடி குடியிருப்புகள், அபார்ட்மென்ட்கள் உள்ளிட்ட கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபகாலமாக, மணல், முறுக்கு கம்பிகள் உள்ளிட்டவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில், பணிகள் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

விலைவாசி உயர்வால் ஏழைகளின் வீடு கட்டும் கனவு, நனவாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு திருச்சி, கரூர் ஆகிய இடங்களில் இருந்து, தினமும் 1,500க்கும் மேற்பட்ட லாரிகளில், மணல் கொண்டு வரப்படுகிறது.

இதில், 2.5 யூனிட் உடைய மணல் லோடு தற்போது, 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. அதேபோல், 3.5 யூனிட் கொண்ட டாரஸ் வாகனத்தில் ஒரு லோடு, 25 ஆயிரத்தில் இருந்து, 30 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது.

விலை உயர்வால், பல கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

கட்டுமான பணிகள் குறைந்துள்ளதால், கணுவாய், சின்னத்தடாகம், பெரியதடாகம் உள்ளிட்ட பகுதிகளில் தயாரிக்கப்படும் செங்கல் விலை குறைந்துள்ளது.

3,000ம் செங்கற்கள் கொண்ட ஒரு லோடு, 18லிருந்து, 16 ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது. கோயமுத்துார்

சிவில் இன்ஜினியர்கள் சங்க முன்னாள் தலைவர் பாலமுருகன் கூறுகையில்,”மணல் விலை உயர்வால் கட்டுமான தொழில் மோசமான நிலையில் உள்ளது.

10 ஆயிரத்து, 500 ரூபாய் ஆக இருந்த மணல்(2.5 யூனிட்) தற்போது, 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது.

அதுவும் சரியான நேரத்தில் மணல் கிடைக்காது. ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. கோவையில் பெரும்பாலான கட்டுமன பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. நிறைய தொழிலாளர்கள் வேலையிழந்து வருகின்றனர்,’என்றார்.

வெளிமாநிலங்களுக்கு முன்னுரிமைஅண்டை மாநிலமான கேரளாவில், நீராதாரங்களில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை இல்லாமல் மணல் அள்ளப்படும் தமிழகத்திலோ, நமக்கு தேவையான மணலை விட, அதிகஎண்ணிக்கையிலான மணல் லோடுகள் கர்நாடகா, கேரளா, ஆந்திராவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

இவற்றை கட்டுப்படுத்தினாலே, மணல் விலையும் கட்டுப்படுத்தப்படும்; இயற்கை வளமும் பாதுகாக்கப்படும் என்கின்றனர் பொறியாளர்கள்.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments