ஜி.டி.பி. 7 சதவீதமாக குறையும்

‘பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., அறிமுகம் ஆகியவற்றின் தாக்கத்தால், இந்தாண்டு, ஜி.டி.பி., எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7 சதவீதமாக குறையும்’ என, உலக வங்கி மதிப்பிட்டு உள்ளது.

குறையும்:

இது குறித்து, உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த, 2015ல், இந்தியாவின், ஜி.டி.பி., 8.6 சதவீதமாக இருந்தது; இது, இந்தாண்டு, 7 சதவீதமாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு, மத்திய அரசு மேற்கொண்ட, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., அறிமுகம் ஆகியவற்றால் ஏற்பட்ட தாக்கமே காரணம்.

அதே சமயம், மத்திய அரசு மேற்கொள்ளும் எண்ணற்ற சீர்திருத்தங்களும், அரசு திட்டங்களுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடும், பெருகி வரும் தனியார் முதலீடுகளும், 2018ல், ஜி.டி.பி., வளர்ச்சியை, 7.3 சதவீதமாக உயர்த்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மந்த நிலை:

நிலையான வளர்ச்சி காரணமாக, நாட்டில் வறுமை குறைந்து, அமைப்பு சாரா துறையினர் நலனில், கூடுதல் கவனம் செலுத்தும் சூழல் உருவாகும்.

இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலையால், தெற்காசிய பொருளாதாரத்தின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தை அடுத்து, இரண்டாவது இடத்திற்கு, தெற்காசியா தள்ளப்பட்டு உள்ளது.

இந்தியாவின் உண்மையான பொருளாதார வளர்ச்சி, 2015ல், 8 சதவீதமாக இருந்தது.

இது, 2016ல், 7.1 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த வளர்ச்சி, நடப்பாண்டு, ஏப்., – ஜூன் வரையிலான காலாண்டில், 5.7 சதவீதமாக சரிவடைந்து உள்ளது.

சூடுபிடிக்கும்:

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சுணக்கம் ஏற்பட்டுள்ள போதிலும், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்திய பின், பொதுத் துறை மற்றும் தனியார் துறையில், நுகர்வு அதிகரித்துள்ளது.

இதற்கு, சாதகமான பருவ மழையும், வேளாண் உற்பத்தியும், அதை தொடர்ந்து, கிராமப்புறங்களில் தேவைப்பாடு அதிகரித்துள்ளதும் காரணம் எனலாம்.

ஜி.எஸ்.டி., அறிமுகத்திற்கு பின், தயாரிப்பு மற்றும் சேவைகள் துறை வளர்ச்சியில், பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி.,யின் தாக்கம், 2018 துவக்கம் வரை இருக்கும்.

அதன்பின், வளர்ச்சி சூடுபிடிக்கும். முழு ஆண்டிற்கான, ஜி.டி.பி., 7 சதவீதத்தை தாண்டி, 2020ல், 7.4 சதவீதமாக அதிகரிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments