டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுடன் தமிழக விவசாயிகள் சந்திப்பு: பிரதமரிடம் பேசுவதாக உறுதி

டெல்லியில்  24வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள் நேற்று,  முதல்வர் அரவிந்த் ெகஜ்ரிவாலை சந்தித்து பேசினர்.

அப்போது  விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக பிரதமர் மோடியை சந்தித்து ேபச இருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்தார்.

காவிரி    மேலாண் வாரியம்  அமைத்தல், தேசிய   மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள்  பெற்ற அனைத்து கடன்களையும்  தள்ளுபடி  செய்தல் உள்ளிட்ட  கோரிக்கைகளை   வலியுறுத்தி  தேசிய   தென்னிந்திய நதிகள்  இணைப்பு விவசாயிகள்  சங்கம்  சார்பில்,   மாநில  தலைவர் அய்யாக்கண்ணு  தலைமையில் விவசாயிகள் டெல்லி  ஜந்தர்  மந்தர்    பகுதியில் கடந்த 14ம் தேதி  முதல் அறவழியில்  போராட்டம்  நடத்தி  வருகின்றனர்.

நேற்று 24வது நாளாக  போராட்டம் நடந்தது. தலையில் முக்காடு அணிந்து, கைகளை கோர்த்தபடி சாலை  ஓரம் நின்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். 

பஞ்சாப், அரியானா, உ.பி.  மாநிலங்களை சேர்ந்த சுமார் 100 விவசாயிகள் நேற்று, ஜந்தர் மந்தருக்கு வந்து  போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில்  நேற்று காலை 10.30 மணியளவில் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, துணைத்தலைவர் கிருஷ்ணன், மாநில செயலாளர் தினேஷ் ஆகியோர் டெல்லி முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு சென்று, அவரை சந்தித்தனர்.

அவர்களை ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன் அழைத்துச் சென்றார். சுமார் அரை  மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது.

அப்போது, அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: தமிழக விவசாயிகளின் போராட்டத்தை ஒட்டுமொத்த விவசாயிகளின் பிரச்னையாக நான் கருதுகிறேன்.

வறட்சி  காரணமாக தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்ததற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

விவசாயிகளின் கோரிக்கைகள்  குறித்து ஆம் ஆத்மி சார்பில் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப உள்ளோம்.

பாஜவுக்கும், எங்களுக்கும் கட்சி அளவில் மாறுபட்ட கருத்து இருந்தாலும், ஒட்டு  மொத்த விவசாயிகளின் நலன் கருதி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உங்களுக்கு தேவையான உதவிகளை ஏற்படுத்தி தர வலியுறுத்த உள்ளேன்.  

டெல்லி ஜந்தர் மந்தரில் எந்த போராட்டம் நடந்தாலும், அது தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை முன்வைத்துதான் நடந்து வருவதாக தெரிந்து கொண்டேன். 

எனவே, அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதுபோல் உங்களது பிரச்னைகளை தீர்க்க விரைவில் வழி காண்பேன். இவ்வாறு அவர் கூறினார். 

இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறுகையில், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த கெஜ்ரிவால், எங்களின் கோரிக்கைகளை பிரதமர் மோடியின் கவனத்துக்கு  எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் வெயில் கடுமையாக இருந்தது. அப்போது தரையில் உருண்டதால் எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.  தற்போது உடல் நிலை நன்றாக உள்ளது.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். ஒன்று வெற்றியுடன் திரும்புவோம். இல்லையென்றால்,  இங்கேயே சமாதி ஆவோம்’ என்றார்.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments