நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு!

நீட் தேர்வு முடிவுகளை வரும் 26ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு சமீபத்தில் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இதில் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் 10.5 லட்சம் மாணவர்களும், தமிழ் உள்ளிட்ட 8 பிராந்திய மொழியில் 1.5 லட்சம் பேரும் தேர்வு எழுதினர்.

நீட் தேர்வின்போது ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறுபட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. மேலும், தமிழ் மொழி வினாத்தாள்கள் மிகவும் கடினமாக இருந்ததாகவும் தேர்வு எழுதிய மாணவர்கள் புகார் அளித்தனர்.

இதில் ஒரே மாதிரியான வினாத்தாள்களுடன் கூடிய தேர்வு முறையை பின்பற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், ‘சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடையால் நீட் தேர்வு எழுதிய 12 லட்சத்திற்கும் மேலான மாணவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. அதனால் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால தடையை ரத்து செய்ய வேண்டும்’ என்று சிபிஎஸ்இ நிர்வாகத்தின் சார்பில் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் அதனை அவசர வழக்காக எடுத்து கொள்வதாகவும், மனு மீதான விசாரணை திங்கட்கிழமை நடைபெறும் என்றும் தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று காலை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சி.பந்த் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் முன்னிலையில் மனு விசாரணைக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மருத்துவ மாணவர்களின் எந்த ஒரு விவகாரத்திலும் உயர் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது.

மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த இடைக்கால தடையால் 12 லட்சத்துக்கும் மேல் தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் பாதிப்புள்ளாகி உள்ளனர்.

அதேபோல் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாததால் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்களும் இன்னும் வழங்கப்படாமல் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவ படிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வகுத்து கொடுத்த அட்டவணை உயர் நீதிமன்ற உத்தரவால் மறைமுகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீட் தேர்வு குறித்து வழங்கிய இடைக்கால தடைக்கு தடை விதிக்கப்படுகிறது.

ஜூன் 26ம் தேதிக்குள் நீட் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட வேண்டும். மேலும், நாடு முழுவதிலும் உள்ள உயர் நீதிமன்றங்களில் நீட் தேர்வு தொடர்பாக நிலுவையில் உள்ள எந்த ஒரு வழக்கையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது.

மேலும், நீட் தேர்வு குறித்து ஏதேனும் விசாரணை மேற்கொள்ள அவசியம் ஏற்பட்டால் அந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தால் மட்டுமே விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments