தனியார் நிறுவன பாலில் ‘சோப் ஆயில்’ கலப்படம்

மதுரையில் நடந்த பரிசோதனை முகாமில், தனியார் பாலில் ‘சோப்  ஆயில்’ கலக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்த விசாரணை   தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தனியார் பாலில் அதிகளவு ரசாயனம் கலப்படம் செய்வதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். 

இதையடுத்து பாலின் தரத்தை  ஆய்வு செய்ய தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை  உத்தரவிட்டது.

தமிழக பால் உற்பத்தியில்  மதுரை, தேனி மாவட்டங்கள்  சிறந்து விளங்குவதால் இம்மாவட்டங்களில் முதலில் ஆய்வு மேற்கொள்ள முடிவானது.

இதனைத்தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் ஐந்து கட்டமாக பால் தர பரிசோதனைகள், 28  குழுவினர் தலைமையில் துவங்கியுள்ளது. 

முதல்கட்டமாக  நேற்று மதுரை புதூரில் பால் தர பரிசோதனை முகாம் நடைப்பெற்றது. மதுரை மாநகராட்சியில் உள்ள  100 வார்டுகளில் இருந்து, 108 பால் மாதிரிகள்  கொண்டு வரப்பட்டன.

இதில் மதுரை  கோச்சடை பகுதியில் இருந்து வந்த தனியார் நிறுவன பால் மாதிரியில்  ‘சோப் ஆயில்’ கலந்திருப்பது  இயந்திரம் மூலம் கண்டறியப்பட்டது.

பாலை முழு ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்கும்படி உணவுப்பொருள் அதிகாரிகளுக்கு கலெக்டர் வீரராகவராவ்  உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டர்  வீரராகவராவ் கூறும்போது, ‘‘108 இடங்களில் இருந்து வந்த மாதிரிகளில், ஒரு பால் மாதிரியில் மட்டும் சோப் ஆயில்  கலந்து இருந்தது.

இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. 11 பால் மாதிரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கும் குறைவாக சத்துக்கள் இருந்தது  கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக சிவில் வழக்கு பதிவு செய்யப்பட உள்ளது. மீதியுள்ள 96 பால் மாதிரிகள் தரமானதாக இருந்தது. மாவட்டத்தில்  உணவு தர பரிசோதனையில் மொத்தம் 27,357 மாதிரிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு 197 மாதிரிகளும், இந்தாண்டு தற்போது வரை 48  மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 56 சிவில் வழக்குகள், 31 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பால் கலப்படம் தொடர்பாக  மதுரை புதூரில்  முதற்கட்டமாக தர பரிசோதனை முகாம் நடத்தப்பட்டுள்ளது.

இதுபோன்று மாவட்டம்  முழுவதும் நடத்தப்படும். பாலில் ரசாயனம்  கலந்திருப்பது  கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை  எடுக்கப்படும்,’’ என்றார்.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments