கேரளத்தின் குப்பைத் தொட்டி ஆகிறதா தமிழகம்?

இயற்கை எழில் மிகுந்த கேரளாவை கடவுளின் பூமி என்று அம்மாநிலத்தவர் சொல்லிக்கொ ள்கின்றனர்.

அதற்கேற்ப அந்த மாநிலத்தை தூய்மையாக வைத்திருக்க மிகவும் சிரத்தை எடுத்துக் கொள்கின்றனர்.

அங்கிருந்து ஒரு பிடி மணலையோ, ஒரு துளி நீரையோ எங்கும் எடுத்துச் சென்றுவிட முடியாது. ஆனால், தன் வீட்டு சுத்தத்துக்காக பக்கத்து வீட்டில் குப்பையை கொட்டுவதைப்போல, தங்கள் மாநிலத்தில் சேரும் மருந்து, இறைச்சி, எலக்ட்ரானிக் கழிவுகளை தமிழகத்தில் கொண்டு வந்து கொட்டுகின்றனர்.

திருவனந்தபுரம், கொல்லம் பகுதிகளில் இருந்து தினமும் 20க்கும் மேற்பட்ட லாரிகள் கழிவு லோடு ஏற்றிக் கொண்டு தமிழகத்தை நோக்கி புறப்படுகின்றன.

இவை பெரும்பாலும் நெல்லை மாவட்டத்தையே குறிவைக்கின்றன.

தமிழகத்தின் தென் தமிழக எல்லை எப்போதும் பாதுகாப்பு குறைந்ததாகவே இருக்கிறது. திருவனந்தபுரத்திலிருந்து பாறசாலை, களியக்காவிளை வழியாக குமரி மாவட்டத்துக்குள் பிரவேசிக்கலாம்.

அங்கிருந்து காவல்கிணறு விலக்கு செக்போஸ்ட் வழியாக நெல்லை மாவட்டத்துக்குள் நுழையலாம்.

கொல்லம், பத்தனம்திட்டா பகுதியிலிருந்து புளியரை வழியாகவும் நெல்லை மாவட்டத்துக்குள் வரலாம். இதில் திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞம் துறைமுக பகுதியாக இருப்பதால் அங்கிருந்து அதிக கழிவுகள் வருகின்றன.

திருவனந்தபுரத்தில் அதிக மருத்துவமனைகள் இருப்பதால் அபாயகரமான மருந்து கழிவுகள், தொற்றுநோய் பரப்பும் இறைச்சி கழிவுகள் வருகின்றன.

மேலும் அதிகமாக எலக்ட்ரானிக் கழிவுப்பொருட்கள், குப்பைகள் வருகின்றன.

குமரி வழியாக இங்குவரும் லாரிகள் இரு மாவட்ட செக்போஸ்ட்களை கடந்து வர வேண்டியிருந்தாலும் சற்றும் கவலைப்படாமல் ரூ.100, 200 என்ற அற்ப லஞ்சத் தொகையை விசிறியடித்துவிட்டு வருகின்றனர்.

அப்படி வரும் லாரிகள் பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் பிடிக்கப்பட்டால் பஞ்சாயத்து பேசி காப்பாற்றி திருப்பி அனுப்பவும் போலீசார் வெட்கப்படுவதில்லை.

கடந்த மாத இறுதியில் பணகுடி வரை வந்த லாரியை இளைஞர்கள் பிடித்து வைத்தும் போலீசார் அதை கைப்பற்ற வரவில்லை.

இறுதியில் எஸ்பி அலுவலகத்தில் முறையிட்ட பிறகே வழக்குப்பதிவு செய்தனர்.

செங்கோட்டை, குற்றாலம், கடையம் பகுதியிலும் அதிக கழிவுகளை கொண்டு வந்து கொட்டும் லாரிகளின் ஓட்டுநர்கள் ஒருநாள், இருநாள் இங்கு தங்கி, அடுத்தமுறை கழிவை கொட்டுவதற்கு தகுந்த இடம் பார்த்துச் செல்கின்றனர்.

கேரளாவிற்கு செல்ல நெல்லை, குமரி மாவட்டத்திலிருந்து பாறசாலை, ஆரியங்காவு ஆகிய வழிகள் உள்ளன.

அங்கு கேரள போலீஸ், வனத்துறை செக்போஸ்ட்கள் உள்ளன.

அங்கிருக்கும் போலீசார் போலீஸ், வக்கீல் என எந்த அடையாள அட்டையை காட்டினாலும் வாகனங்களை சோதிக்காமல் விடுவதில்லை.

ஆனால் தமிழக செக்போஸ்ட்களில் பணியாற்றும் ஊழியர்கள் லஞ்சத்திற்கு விலை போய் விடுவதால் எல்லைப்பகுதி சாலையோரங்களில் கேரளக் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுகின்றன.

ஒரு மாநிலத்தின் நுழைவாயிலில் போலீசாரோடு நிர்வாக அதிகாரிகளும் கண்காணிப்பது நல்லது.

வாரம் ஒரு முறையாவது அதிரடி ஆய்வு மேற்கொள்ளுமாறு கலெக்டர் அப்பகுதி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகின்றனர்.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments