வடகிழக்கு பருவமழையை சமாளிக்க சென்னை தயாரா?

வடகிழக்கு பருவமழையை சமாளிக்க சென்னை தயாரா ?

கடந்த ஆண்டு வெள்ள பாதிப்பில் இருந்தே, சென்னை நகரம் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், நாளை வடகிழக்கு பருவமழை துவங்க இருப்பதாக வெளியான அறிவிப்பு, சென்னை மாநகராட்சி நிர்வாகிகளை கவலையில் தள்ளியுள்ளது.

வெள்ள பாதிப்புகளை தடுக்க, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில், வெள்ளம் வந்ததும் செய்ய வேண்டிய மீட்பு பணிகளுக்கு முழுவீச்சில் தயாராகி வருகின்றனர்.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால், சென்னையில், 10 லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டன. தென் சென்னையில் வேளச்சேரி, சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், எம்.ஜி.ஆர்., நகர், கே.கே.நகர், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடுமையான சேதம் ஏற்பட்டது.

ஒட்டுமொத்த நகரமும் வெள்ளத்தில் மிதக்க, மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் ஸ்தம்பித்தது.

தமிழக அரசு, 15 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை களத்தில் இறக்கி, மீட்பு பணிகளை கவனித்ததைத் தொடர்ந்து, ஒரு மாத காலத்தில், இயல்பு வாழ்கை திரும்பியது.

அந்த வெள்ளத்தின் சோக சுவடுகள் இன்னும் முழுமையாக மறையாத நிலையில், நாளை வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டும் மழையின் அளவு அதிகமாக இருக்கும், புயல் சின்னங்கள் அதிக அளவில் உருவாக வாய்ப்பு இருப்பதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையை சமாளிக்க சென்னை தயாரா? ஆய்வு கூட்டம்:-

இந்த அறிவிப்பு, மாநகராட்சி நிர்வாகத்தை கவலையடைய செய்துள்ளது. இருப்பினும், வெள்ள பாதிப்பை சமாளிக்க தேவையான, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, துறை வாரியாக அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.

ஏற்கனவே, மேயர் சைதை துரைசாமி தலைமையில், 32 துறைகளுடன், வெள்ளத்தை சமாளிக்க, விரிவான ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பொதுப்பணி, நெடுஞ்சாலை துறைகள் மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகங்களுக்கு ஏராளமான அறிவுரைகள் வழங்கப்பட்டன.

‘நெடுஞ்சாலை மழைநீர் வடிகால்களை துார்வாருதல், கடந்த மழைக்கு உடைக்கப்பட்ட சிறுபாலங்களை போர்க்கால அடிப்படையில் சீரமைத்தல், பொதுப்பணித்துறை நீர்வழிப்பாதைகளை விரைந்து துார்வாருதல், முகத்துவாரங்களை, 24 மணி நேரமும் தண்ணீர் செல்லும் வகையில் துார்வாருதல், மெட்ரோ ரயில் நிர்வாகம், சுரங்க பணிகளுக்காக அடைத்த கால்வாய்களை, தண்ணீர் செல்ல வசதியாக கால்வாய் அமைத்து தருதல்’ ஆகிய பணிகளை, வேகமாக செய்யுமாறு மேயர் அறிவுறுத்தினார்.

னால், இவற்றில் எதையும் அத்துறைகள் இதுவரை செய்யவில்லை. மெட்ரோ ரயில் நிர்வாகம், நந்தனம் கால்வாய், சைதாப்பேட்டை அடையாறு ஆறு ஆகிய இடங்களில் சுரங்கம் தோண்டிய மண்ணை, மலை போல கொட்டி குவித்து, நீரோட்டத்திற்கு தடையை ஏற்படுத்தி உள்ளது.

பொதுப்பணித் துறை அதிகாரிகள், தற்போது தான் ஆங்காங்கே ஜே.சி.பி., இயந்திரங்களை இறக்கி, கால்வாய் துார்வாரும் வேலைகளை செய்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு பெரும் சேதத்திற்கு காரணமான அடையாறு ஆற்றை துார்வாரி, சீரமைக்க போதிய நிதி ஒதுக்கப்படாததால், தற்போது ஆலந்துார் சாலை மேம்பாலம் வரை மட்டுமே ஆறு துார்வாரப்படுகிறது.

வடகிழக்கு பருவமழையை சமாளிக்க சென்னை தயாரா? ஆக்கிரமிப்பு அகற்றம்:-

அதன்பிறகு சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், பட்டினப்பாக்கம் ஆகிய இடங்களில், ஆற்றில் தேங்கியுள்ள ஆகாய தாமரைகளை, மாநகராட்சி நிர்வாகம் அகற்றி வருகிறது. இந்த பகுதிகளில் பொதுப்பணித்துறை சார்பில் எந்த மேம்பாட்டு பணிகளும் இதுவரை துவங்கப்படவில்லை.

வெள்ள பாதிப்பின்போது, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளில், ஆற்றின் கரையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கரைகள் அமைக்கப்பட்டன. அதுவே போதுமானது’ என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

பட்டினப்பாக்கம் முகத்துவாரம் அருகே தற்போது, 50 மீட்டர் அகலத்தில், மழைநீர் கடலில் கலக்க வழி அமைக்கப்பட்டு உள்ளது.

மழை துவங்கியதும், முகத்துவாரத்தில், 650 மீட்டர் அகலத்தில் முழுமையாக அடைப்பு திறக்கப்பட்டு, மழைநீர் கடலில் கலக்க வழி ஏற்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.<

வடகிழக்கு பருவமழையை சமாளிக்க சென்னை தயாரா? ஹெலிகாப்டர் சேவை:

கூவத்தை பொறுத்தவரை, கடந்த வெள்ளத்தில் செய்த பணிகளை தவிர, தற்போது சென்னை நகர் எல்லையில் எந்த பணிகளும் நடைபெறவில்லை.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையம், எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை ஆகிய பகுதிகளில், கூவத்தில் ஆகாய தாமரைகள் படர்ந்து, நீரோட்டத்திற்கு பெரும் தடையாக உள்ளது.

வீராங்கல் ஓடை இணைப்பு பணி உள்ளிட்ட, கடந்த ஆண்டு வெள்ளத்திற்கு காரணமான பல்வேறு பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாமல் உள்ளன.

இதனால், மாநகராட்சி மழைநீர் வடிகால்களை துார்வாரினாலும், மற்ற துறைகளின் ஒத்துழைப்பு இல்லாததால், கடும் மழைக்கு சென்னை நகரம் வெள்ளத்தில் சிக்குவதை யாராலும் தடுக்க முடியாது.

அதற்கேற்ப, வழக்கமான மீட்பு நடவடிக்கைகளை செய்ய, மாநகராட்சி ஆயத்தமாகி விட்டது. தேசிய பேரிடர் மீட்பு படை, மீன்வளத்துறை, விமானப்படை, கடற்படை ஆகியவற்றிடம், மீட்பு பணிகளுக்கான படகுகளை தயார் நிலையில் வைக்கவும், ஹெலிகாப்டர் சேவைக்கு தயாராக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவமழையை சமாளிக்க சென்னை தயாரா? அமைச்சர் ஆலோசனை:-

உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, தலைமை செயலகத்தில் நேற்று அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார்.

அதில், வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

மழைநீர் தேங்கும் பகுதிகளில், குழாய் மூலமான குடிநீர் வினியோகத்தை நிறுத்தவும், லாரிகள் மூலம் மட்டுமே குடிநீர் வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

பருவமழையை சமாளிக்க, அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்கவும், காலை, 6.00 மணி முதல், களத்தில் துப்புரவு பணிகளை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments