ஆலம்பாடி காவிரி ஆற்றில் அதிகரிக்கும் உயிரிழப்பு

ஆலம்பாடி காவிரி ஆற்றில் அதிகரிக்கும் உயிரிழப்பு: சுற்றுலாப்பயணிகள் குளிப்பதை தடுக்க கம்பி வேலி அமைக்கப்படுமா?

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ளது ஒகேனக்கல் சுற்றுலா தலம். இங்கு ஆண்டு முழுவதும் அருவியில் தண்ணீர் விழுவதால் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் இருந்து தினமும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இவர்களை கவர சிறுவர் பூங்கா, பெரியவர்கள் பூங்கா, மீன் அருங்காட்சியகம், முதலை பண்ணை உள்ளிட்டவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கூத்தப்பாடி ஊராட்சி சார்பில் பேருந்து நிலைய விரிவாக்கம், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை லட்சத்தை தொட்டு விடுவதால் அருவிகளில் வரிசையில் நின்று குளிப்பது என்பது இயலாத காரியமாக இருக்கிறது.

பெங்களூர், சென்னை, மைசூர் போன்ற வெகுதொலைவில் இருந்து வரும் பயணிகள், குளிக்க பல மணி நேரம் காத்திருப்பதை விரும்புவதில்லை.

இதனால் உடனடியாக குளிக்க, ஆள்அரவமற்ற இடமான ஒகேனக்கல்லில் இருந்து அஞ்செட்டி செல்லும் வழியில் உள்ள ஆலம்பாடி அருகே காவிரி ஆற்றில் குளிக்க செல்கின்றனர்.

இப்பகுதியில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் விரைவாக குளித்து விட முடியும் என்பதால் பஸ், வேன், கார்களில் இங்கு வந்து ஆசை தீர குளிக்கின்றனர்.

இதையொட்டி அருவியில் இருக்கும் கூட்டம்போல் ஆலம்பாடி காவிரி ஆற்றிலும் கூட்டம் அலைமோதுகிறது. இப்பகுதியில் ஆற்றில் சுழல் மற்றும் ஆழமான பகுதியாக இருப்பதால் மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளது.

இருந்த போதும் சுற்றுலாபயணிகள் ஆலம்பாடி பகுதியில் குளிப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் அடிக்கடி இப்பகுதியில் ஆற்றில் குளிப்பவர்கள் சுழலில் சிக்கி இறந்து விடுவது வாடிக்கையாக உள்ளது.

நடப்பாண்டில் மட்டும் ஆலம்பாடி பகுதியில் ஆற்றில் குளிக்கும்போது சுழலில் சிக்கி 47 பேர் வரை உயிரிழந்துள்ளனர். குளிக்கும்போது பலர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஆலம்பாடி பகுதியில் உயிரிழப்பை தடுக்க, ஒகேனக்கல் முதலை பண்ணை முதல் ஆலம்பாடி வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரும்பு கம்பி வேலி (பென்சிங்) அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், காவல்துறை சார்பில் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் இத்திட்டத்திற்கு வனத்துறையிடம் இருந்து அனுமதி கிடைக்காததால் இத்திட்டம் கிடப்பில் கிடக்கிறது.

கடந்த 3 மாதங்களாக ஒகேனக்கல் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருவதையொட்டி எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்த போதும் நிரந்தர தீர்வாக பொதுமக்களை காப்பாற்றும் வகையில் பென்சிங் அமைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து ஒகேனக்கல் வனத்துறையினர் கூறும்போது, ஒகேனக்கல் வனபகுதியில் யானைகள் சுமார் 50க்கும் மேற்பட்டவை உள்ளன.

இந்த யானைகள் அனைத்தும் ஆலம்பாடி வனப்பகுதியில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் குடிக்க செல்லும். ஆலம் பாடியில் பொதுமக்கள் குளிக்காமல் இருக்க பென்சிங் அமைத்தால் யானைகளின் வழித்தடம் மாறும்.

இதனால் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் மலை கிராமங்களுக்குள் தண்ணீர் தேடி செல்லும் அபாயம் ஏற்படும்.

மேலும் ஆலம்பாடி பகுதியில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு ஆற்றுக்குள் வாகனங்கள் உள்ளே செல்லாமல் இருக்க ஆற்றங்கரையோரம் குழிகள் வெட்டி முள்வேலி அமைத்துள்ளோம். மேலும் ஆலம்பாடி பகுதிக்கு சென்று குளிப்பவர்களை எச்சரிக்கை செய்கிறோம்’ என்றனர்.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments