கூவம் நதி சாக்கடையான வரலாறு!

கூவம் நதி:-

நதியை சாக்கடையாக்கிய மோசமான பெருமை, நமக்கு உண்டு. கூவம் என்றதும் மூக்கை பிடிக்கும் அளவிற்கு வீசும் துர்நாற்றம் தான் நினைவுக்கு வருகிறது.

ஆனால், படகு போக்குவரத்துக்கும், மக்கள் மீன் பிடித்து உண்ணுவதோடு சுற்றுலா தலமாகவும் கூவம் இருந்தது என்பது வரலாறு.

‘கூவத்தை சீரமைக்கிறோம்’ என்று, அரசியல்வாதிகள் மாறி மாறி, மக்கள் பணத்தை கொள்ளையடித்தது தான் மிச்சம். கூவத்தை மீண்டும் உயிர்ப்பிக்க தேவை, நேர்மையான வலுவான தலைமை.

அணையில் பிறக்கும் கூவம்!

கடந்த, 65 ஆண்டுகளுக்கு முன், வேலுார் மாவட்டம், அரக்கோணம் ஒன்றியம், கேசவரம் பகுதியில், 437 மீ.,நீளத்தில், 16 ஷட்டர்களுடன், கேசவரம் அணை கட்டப்பட்டது.

பாலாற்றில் இருந்து கல்லாற்றுக்கு வரும் தண்ணீர், கல்லாற்றில் இருந்து கேசவரம் அணையை வந்தடைகிறது.

அவ்வாறு வந்தடையும் நீர், கேசவரம் அணையில் இருந்து, ஒருபக்கம் கொற்றலை ஆறாகவும், மறு பக்கம் கூவம் ஆறாகவும், பிரிந்து ஓடுகிறது.

கேசவரம் அணையில் உள்ள,16 ஷட்டர்களும், 10 ஆண்டுகளாக பழுதடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன.

மேலும், அணையின் கட்டுமானம் சேதமடைந்துள்ளது.கேசவரம் அணையின் வறண்ட நிலையை பயன்படுத்தி, செங்கல் சூளை, மணல் திருட்டு என ஆரம்பிக்கும், கூவம் ஆறு, பேரம்பாக்கம் வழியாக செல்கிறது.

கூவம் என்னும் கிராமத்தில் உள்ள, கூவம் ஏரியின் கலங்கலில் இருந்து வெளியேறும் நீர், நரசிங்கபுரம், இருளஞ்சேரி, சத்திரை வழியாகவும், பன்னுார், கீழச்சேரி வழியாக சென்று, மப்பேடு அருகில் கூவம் ஆற்றில் கலக்கிறது.

இதையடுத்து அதிகத்துார், மணவாளநகர், அரண்வாயல், புதுச்சத்திரம், பருத்திப்பட்டு, திருவேற்காடு, மதுரவாயல், கோயம்பேடு வழியாக, 72 கி.மீ., துாரம் பயணித்து, சென்னை நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கிறது.

மணல் திருட்டும் ஆக்கிரமிப்பும்

கூவம் ஆறு செல்லும் வழித்தடம், கேசவரம் அணையில் இருந்து, ஆவடி பருத்திபட்டு வரை மணல் திருட்டாலும், ஆக்கிரமிப்பாலும் வறண்டு காணப்படுகிறது

பூந்தமல்லி – திருவள்ளூர் நெடுஞ்சாலையில், அரண்வாயல் குப்பம் கிராமம் அருகே, பெரிய நிறுவனங்கள், கூவம் ஆற்றை பாதியளவுக்கு ஆக்கிரமித்து கட்டடங்களை கட்டி வருகின்றன.

ஆவடி – பருத்திபட்டு வரை, கழிவுநீர் கலப்பு இல்லாமல் வரும் கூவம் ஆறு, ஆவடி – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திருவேற்காடு பகுதியில் உள்ள வீரராகவபுரத்தில், ஆவடி மற்றும் திருவேற்காடு நகராட்சியில் வசிக்கும் மக்களால் உபயோகப்படுத்தப்படும் மொத்த கழிவுநீரும் கலக்கிறது.

சென்னீர்குப்பம் பகுதியில், சாயப்பட்டறையின் கழிவுநீர் மொத்தமும் கூவம் ஆற்றில் கலக்கிறது.

இதுபோல், சென்னையில், கூவம் செல்லும் வழித்தடத்தில், 40க்கும் மேற்பட்டஇடங்களில் கழிவுநீர் கலக்கிறது.

கூவத்தின் தற்போதைய நிலை:-

கூவம் ஆறு பிறக்கும் கேசவரம் அணையில் இருந்து, ஆவடி – பருத்திபட்டு வரை நீர் உள்ள பகுதிகளில் பறவைகள், மீன் இனங்கள் என, கூவம் ஆறு உயிர்ப்புடன் இருப்பதை காண முடிகிறது.

இதனால், 72 கி.மீ., துாரத்தில், 45 கி.மீ., துாரமான ஆவடி வரை உயிர்ப்புடன் இருக்கும் கூவம் ஆறு, திருவேற்காட்டிலிருந்து சென்னை வரையிலான,27 கி.மீ., கூவம் செத்துவிட்டது.

கூவம் ஆற்றை உயிர்ப்பிக்க முடியுமா?

திருவேற்காட்டில் இருந்து, நேப்பியர் பாலம் வரை, கூவம் ஆற்றில் கழிவுநீர் கலக்கும் இடங்களில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.

இது அமைக்கும் செலவை, அந்தந்த நகராட்சி மற்றும் மாநகராட்சி மண்டலங்கள் மூலம் செய்யும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 30 – 80 லட்சம் ரூபாய் வரை மட்டுமே, பராமரிப்புடன் செலவாகும்.

இதனால், கூவம் ஆற்றிற்கு சுத்திகரிக்கப்பட்ட நீர் மட்டுமே செல்லும். இந்த சுத்திகரிக்கப்பட்ட நீரை, உள்ளாட்சி அமைப்புகள் பூங்கா பராமரிப்பு, கட்டட பணி உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தும் பட்சத்தில், சுத்திகரிப்பு நிலையத்திற்கு செய்யப்பட்ட செலவும் குறையும்; கூவமும் சுத்தமாகும்கூ

வம் கரையோரம் வசிக்கும் ஆக்கிரமிப்பு குடிசைகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும்.

கூவம் கரையோரம் சாலை அமைக்க வேண்டும். அவ்வாறு சாலை அமைக்கும் பட்சத்தில் கூவம் ஆற்றில் குப்பை கொட்டினாலோ, கழிவுநீர் கலந்தாலோ, மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் தெரிய வரும்.

இதனால் கூவம் ஆற்றில், மறைமுகமாக குப்பை கொட்டும் செயல் தடுத்து நிறுத்தப்படும். சென்னையில் போக்குவரத்து நெரிசலும் குறையும் கூவம் ஆற்றில் படகு சவாரி, பூங்காக்கள், சுற்றுலாத் துறை மூலம் அமைக்கவேண்டும்.

இந்த பணிகள் நடைபெறும் பட்சத்தில், கூவம் ஆறு, லண்டன் தேம்ஸ் நதிபோல், சென்னை தேம்ஸ் நதியாக மாறும் நாள் வெகுதுாரத்தில் இல்லை.

விவசாயம் செழித்தோங்கும்!

கேசவரம் அணையில், 10 ஆண்டுகளாக, எந்தவித தடையுமின்றி மணல் திருட்டு நடக்கிறது. இதனால், கேசவரம் அணை உயர்ந்து தாழ்ந்து உள்ளது. அணையில் நீர் தேக்கி, விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்தோம்; இப்போது, அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எடுப்பதில்லை. அணையில் நீர் தேக்கினால், இந்த பகுதியில் விவசாயம் செழித்தோங்கும்.சி.சங்கர், பழைய கேசவரம், வேலுார்

சமூக விரோத செயல்கள்

கேசவரம் அணையை பராமரிப்பதற்காக, முன்பு, இரண்டு ஊழியர்கள் பணிபுரிந்தனர். இதனால், அணை பாதுகாப்புடனும், பராமரிப்புடனும் இருந்தது. இப்போது, யார் வேண்டுமானாலும் அணைக்கு செல்லலாம். அணையில் சமூகவிரோத செயல்கள் அதிகளவில் நடக்கின்றன. இதை தடுக்க, அணையின் பழுதுகளை சரி செய்து, கண்காணிக்க ஆட்களை நியமிக்க வேண்டும்.
ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments