சேலம் அருகே குடிபோதையில் ரகளை சென்னை போலீஸ்காரரை மின்கம்பத்தில் கட்டி அடி, உதை

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட போலீஸ்காரரை பிடித்து, மின்கம்பத்தில் கட்டி வைத்து கிராம மக்கள் அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அமரகுந்தியை சேர்ந்தவர் முத்துசாமி. ஓய்வு பெற்ற கிராம உதவியாளர். இவரது மகன் மகேந்திரன்(30). சென்னை மாநகர ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றுகிறார்.

இவரது மனைவி சாரதா, அமரகுந்தியில் உள்ள முத்துசாமி வீட்டில் உள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு, சாரதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து  விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த மகேந்திரன், குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் நேற்றுமுன்தினம் இரவு நண்பர்களுக்கு விருந்து வைத்துள்ளார். 

நண்பர்கள் 4 பேருடன் பெரியேறிப்பட்டு தாண்டானூரில் உள்ள கோயிலில் அவர் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த மக்கள், கோயிலில் மது அருந்த கூடாது என கண்டித்துள்ளனர். இதை ெபாருட்படுத்தாத மகேந்திரன், அப்பகுதி மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அத்துடன், “ நான் ஒரு போலீஸ். என்னை ஒன்றும் செய்ய முடியாது” என்றும் கூறி தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது.  

இதனால் ஆத்திரமடைந்த மக்கள், மகேந்திரனை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்த அவரது நண்பர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இதையடுத்து மகேந்திரனை அங்குள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்து, தொளசம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். 

போலீசார் விரைந்துவந்து மகேந்திரனை மீட்டு அழைத்து செல்ல முயன்றனர். இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, உயரதிகாரிகள் உடனடியாக வர வேண்டும். மகேந்திரன் மற்றும் அவருடன் வந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக்கூறினர்.

இதையடுத்து பொதுமக்கள் முன்னிலையில் மகேந்திரன் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக போலீசார் கையெழுத்து வாங்கினர்.

இதன்பின்னரே, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து செல்ல பொதுமக்கள் அனுமதித்தனர். இதுகுறித்து தொளசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments