மாடித்தோட்டம் – ஒரு முழுமையான கையேடு:

மாடித்தோட்டம் – ஒரு முழுமையான கையேடு – நன்றி: விகடன்.

`ரசாயனங்கள் பயன்படுத்தி விளையும் காய்கறிகளைத் தவிர்க்க வேண்டும். இயற்கையாக விளைவிக்கப்படும் காய்கறிகளை உண்ண வேண்டும் என்கிற விழிப்பு உணர்வு பெருகி வருவதால், வீட்டு மொட்டைமாடிகளில் தோட்டம் அமைப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

சென்னையில் மட்டும் தற்போது சுமார் 20,000 ஏக்கர் அளவுக்கு மொட்டைமாடிகள் காலியாக உள்ளன. இவற்றில் 3 – 5 சதவிகித பரப்பளவில் மட்டுமே மாடித்தோட்டம் இருக்கிறது. வரும் காலங்களில் இது அதிகரிக்கும் என்பதுடன், மற்ற நகரங்களிலும் இது பரவலாகும்’’ என்று நம்பிக்கை பொங்க சொல்கிறார் தோட்டக்கலைத்துறையில் இணை இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்ற தங்கவேலு.

மாடித்தோட்டம் அமைப்பதற்கான முழுமையான வழிகாட்டலை அவரிடமே கேட்டபோது, வரிவரியாக விளக்க ஆரம்பித்துவிட்டார்.

தொட்டிக்கலவை!

“மாடித்தோட்டத்துக்கான தொட்டிகளில் வெறும் மண்ணைப் பயன்படுத்தி செடிகளை வளர்ப்பதைவிட செம்மண், தேங்காய்நார்க் கழிவு இரண்டையும் கலந்து தொட்டிகளில் நிரப்பி அவற்றில் வளர்க்கும்போது கூடுதல் பலன் கிடைக்கும்.

வெறும் செம்மண்ணில் தண்ணீர் விட்டால் இறுகிவிடும் என்பதால் அடிக்கடி கொத்திவிட வேண்டியிருக்கும். தேங்காய் நார்க்கழிவைச் சேர்த்தால், அடிக்கடி கொத்திவிடத் தேவையிருக்காது.

செடியின் வளர்ச்சிக்கு வெறும் தண்ணீர் மட்டுமே போதாது. சில ஊட்டச்சத்துகளும் தேவை. அதற்காக `என்.பி.கே’ எனப்படும் நைட்ரஜன் (செடியின் ஆரம்பகட்ட தழை வளர்ச்சிக்கு), பாஸ்பரஸ் (பூ, காய்களின் வளர்ச்சிக்கு), பொட்டாசியம் (வேர் வளர்ச்சிக்கு) ஆகியவை அடங்கிய உரம் அவசியம்.

இதை மாட்டுச்சாணம் உள்ளிட்ட இயற்கை பொருட்களில் இருந்தே தயாரிப்பதுதான் நல்லது. மண் மற்றும் செடியின் வளர்ச்சிக்கு மண்புழு உரமும் பயன்படுத்தலாம்.

மாடித்தோட்டம் அமைக்கப் பயன்படுத்தும் தொட்டியில் மண், தேங்காய்நார் மற்றும் இடுபொருட்களை தண்ணீர் இன்றி சரிவிகித அளவில் கலந்து நிரப்ப வேண்டும்.

இவற்றை தனித்தனியே வாங்கி தொட்டிக்கலவையை தயார் செய்யலாம் அல்லது இயற்கை அங்காடிகளில் ரெடிமேடாகவும் வாங்கிக்கொள்ளலாம்.

தரமான விதைகள் அவசியம்!

தொட்டியின் (அல்லது பை) பக்கவாட்டு கீழ்ப்பகுதியில் ஒன்றிரண்டு சிறு துளைகள் போட செடிக்கும் விடும் உபரிநீர் இதன் வழியாக வெளியேறுவதால் அழுகுவதில் இருந்து வேர் காப்பாற்றப்படும்.

தொட்டியில் செடிகளுக்கு குறைந்தபட்சம் ஒன்றேகால் அடி உயரத்துக்கும், கொடிகளுக்கு இரண்டு அடி உயரத்துக்கும், மரங்களுக்கு மூன்றடி உயரத்துக்கும் தொட்டிக்கலவையை நிரப்ப வேண்டும்.

மொட்டைமாடியின் அமைப்பைப் பொறுத்தும், செடி, கொடி, மரங்களின் வளர்ச்சியைப் பொறுத்தும், செடிகளுக்கு குறைந்தபட்சம் 1.5 X 3, கொடிகளுக்கு 5 X 5,

மரங்களுக்கு 6 X 6 இடைவெளிகளில் தொட்டிகளை வரிசையாக வைக்க வேண்டும்.

தரமான நாட்டுவிதைகள்தான் நல்லது.அவற்றின் மூலம் விளையும் காய்களே சுவையாகவும் இருக்கும். அப்படி கிடைக்காவிட்டால் கலப்பின வீரிய ஒட்டு ரக விதைகளைப் பயன்படுத்தலாம்.

நாட்டு விதைகள் என்றால், ஒரு தடவை வாங்கினால் போதும். அடுத்தடுத்த தடவைகளுக்கு மாடித்தோட்ட செடிகளில் இருந்தே விதைகளை சேமித்துக் கொள்ளலாம்.

தொட்டிக்கு இரு விதைகள் (அல்லது நாற்றுகள்) என்ற அளவில் ஊன்ற வேண்டும். சரியான அளவில் தண்ணீர் ஊற்றிவர, சில நாட்களில் சரியாக வளராத ஒன்றை நீக்கிவிடலாம்.

இரண்டுமே சரியாக முளைத்திருந்தாலும் ஏதாவது ஒன்றை நீக்கினால்தான் மற்ற செடி நன்றாக வளரும். இரண்டுமே வளரவில்லை என்றால், என்ன பிரச்னை என்பதைக் கண்டறிய வேண்டும்.

இதற்கு இயற்கை விவசாயிகள் அல்லது தோட்டக்கலைத்துறை உதவியை நாடலாம். நல்ல விதைகள் மற்றும் நாற்றுகளை தோட்டக்கலைத்துறை அல்லது இயற்கை அங்காடிகளில் வாங்கலாம்.

எவற்றில் எல்லாம் செடி வளர்க்கலாம்?

மண் தொட்டி, `ஜூட் குரோ பேக்ஸ்’ (jute grow bags), மூங்கில் கூடை, சிமென்ட் பை மற்றும் சிமென்ட் தொட்டிகளில் செடிகளை வளர்க்கலாம்.

மண்தொட்டி மற்றும் ஜூட் பேக் மூன்று ஆண்டுகள் வரை தாங்கக்கூடியவை. ஜூட் பைகளை அதற்குப் பின் தூளாக்கி செடிகளுக்கு உரமாக இடலாம்.

ஒரு குடும்பத்துக்கு 40 செடிகள்!

300 சதுர அடி பரப்பளவில் போதிய இடைவெளியில் 40 தொட்டிகளில் வீட்டுக்குத் தேவையான அனைத்துவிதமான செடி, கொடி, மரங்களை வளர்ப்பதால், நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கான காய்கறித் தேவையை முழுமையாக பூர்த்தி செய்துகொள்ளலாம்.

இடவசதி இல்லாதவர்கள் 50 சதுர அடி பரப்பளவிலான இடத்திலும கூட பெஞ்ச் டெரஸிங் (bench terracing) முறையில் மாடித்தோட்டம் அமைக்க முடியும்.

இதில் மூன்று அடுக்குகளைக்கொண்ட, இரண்டு இணைப்புடன் கூடிய பெஞ்சில் தரையுடன் சேர்த்தால் இருபக்கமும் தலா நான்கு வரிசை கிடைக்கும்.

அவற்றில் ஒரு வரிசையில் ஐந்து செடிகள் என, 40 செடிகளை வளர்க்க முடியும். பெஞ்ச் டெரஸிங் முறை அமைக்க, சதுர அடிக்கு 60 ரூபாய் செலவாகும்.

அடுக்குமாடிகளில் குடியிருப்பவர்களால், மொட்டைமாடிகளில் செடிகளை வளர்க்க முடியாது. ஆனாலும் சிறிய அளவில் சில மூலிகைச் செடிகளை வளர்க்க ஆசைப்படு பவர்கள், பால்கனிகளில் ஒரு ரெயிலிங் பாட் (railing pot) தொட்டியில் இரு செடிகள் விகிதம் தேவைக்கேற்ப வளர்க்கலாம். ரெயிலிங் பாட் ஒன்றின் விலை 350 ரூபாய்.

மாடித்தோட்டம் – கிட்

Terrace Gardening Kit
This Terrace Gardening Kit consists of Grow Bags, Cocopeat Medium, Vermicompost and Vegetables and Green Seeds.<br /> Leave your Comment below to get this Terrace Gardening Kit.
Brand: Tamizzle
Manufacturer: Indian Terrace Garden
Model: Terrace Gardening Kit - 1
Product ID: TGK - 1
4.5 based on 19 reviews
$4200.00 New

என்னவெல்லாம் விளைவிக்கலாம்?

மாடித்தோட்டத்தில், நிலத்துக்கு மேலே விளையக்கூடிய, வெப்பத்தைத் தாங்கி நிலத்தடியில் விளையக்கூடிய அனைத்து வகையான காய்கறிகள், கிழங்கு வகைகளையும், குறிப்பாக, கீரை வகைகளை ஆண்டு முழுவதும் விளைவிக்கலாம். மேலும், பந்தல் அமைத்து கொடி வகைகளையும் பயிரிடலாம்.

வாழை, சப்போட்டா, மா, மாதுளை, கொய்யா போன்ற ஒட்டு ரக மரங்களை, பெரிய அளவிலான மண் தொட்டிகளில் வளர்க்கலாம்.

குளிர் பிரதேசங்களில் விளையக்கூடிய கேரட், பீட்ரூட், குடமிளகாய், உருளைக்கிழங்கு போன்றவற்றை வளர்க்க முடியாது. இந்த காய்கறிகளை பசுமைக்குடில் (கிரீன் ஹவுஸ்) அமைத்து வளர்க்கலாம். இதற்கு அதிக செலவு பிடிக்கும்.

தொட்டிக்கலவையில் இருக்கும் தேங்காய் நார்க்கழிவானது பெருமளவிலான நீரினை ஒரேநேரத்தில் உறிஞ்சிக்கொள்ளும் என்பதால், சில நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர்விட்டாலே போதும்.

இது ஒவ்வொரு செடி அல்லது மரங்களின் தேவையைப் பொறுத்து மாறுபடும். முடிந்தவரையில் தெளிப்பான் (ஸ்பிரேயர்) மூலமாக தண்ணீர் விடுவதன் மூலம், உபரியாக நீரும் நீரோடு இயற்கை உரங்களும் வெளியேறுவதைத் தடுக்கலாம். சொட்டுநீர்ப் பாசன (drip irrigation) முறையையும் பயன்படுத்தலாம்.

பராமரிப்பு!

ஒரு நாளைக்கு காலை, மாலை வேளைகளில் தலா அரை மணி நேரம் செலவழித்து, செடி களுக்குத் தண்ணீர் விடுவது, வளர்ச்சி, நோய்த் தாக்குதல்களை கண்காணிப்பது, காய்ந்த இலைகளை நீக்கி அதையே உரமாக்குவது, 15 நாட்களுக்கு ஒருமுறை களை அகற்றுவது, பஞ்சகவ்யா போன்ற இயற்கை வளர்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்துவது என செயல்பட்டால் போதும்.

மாடித்தோட்டம் ஒரு ஆண்டுக்குப் பிறகு லாபம்தான்!

நான்கு நபர்கள் கொண்ட குடும்பத்துக்கு 300 சதுர அடியில் 40 செடிகள் வளர்த்து தேவையான அனைத்து காய்கறிகளையும் உற்பத்திசெய்ய முதலீடாக 25,000 ரூபாய் செலவாகும்.

பராமரிப்பு மற்றும் உர செலவு - மாதத்துக்கு 300 ரூபாய்; தண்ணீர் செலவு மாதத் துக்கு 200 - 300 ரூபாய்.

இந்தக் குடும்பத்துக்கு ஒரு மாத காய்கறி செலவு சுமார் 1,000 முதல் 1,500 ரூபாய் வரை ஆகும். இந்தத் தொகை ஆண்டு முழுக்க சேமிக்கப்படுவதால், மாடித்தோட்டம் அமைக்க முதலீடு செய்த தொகையை, ஓர் ஆண்டில் கிட்டத்தட்ட ஈடுசெய்துவிடலாம்.

அதன்பின்னர் பல ஆண்டுகளுக்கு பெரு மளவிலான தொகையை மிச்சப்படுத்தலாம். குறிப்பாக, மர வகை பயிர்கள் குறைந்தபட்சம் வைத்த 3 ஆண்டுகளில் துவங்கி 15 ஆண்டுகள் வரை பலன் கொடுப்பவை.

காய்கறி விலை அதிகரித்துக்கொண்டே செல்லும் சூழலில், மாடித்தோட்ட வேளாண்மையால் நம் வீட்டுத் தேவைக்கு மட்டுமல்லாமல், அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கும் விற்பனை செய்து வருமானம் ஈட்டலாம்.

பெருநகரங்களில் இயற்கை காய்கறிகளுக்கு அதிக தேவை இருப்பது குறிப்பிடத்தக்கது. இட வசதியும், செலவு செய்யும் திறனும் குறைவாக இருப்பவர்கள், குறைந்த அளவிலான தொட்டிகள் வைத்து மிகவும் சிக்கனமாக மாடித்தோட்டம் அமைத்துக் கொள்ளலாம்.

மொத்தத்தில், மாடித்தோட்டம் மூலம் பூச்சிக்கொல்லிகள், ரசாயன உரங்கள் படியாத காய்கறிகள், சுவாசிக்க தூய்மையான காற்று கிடைப்பதுடன், காய்கறிச் செலவும் மிச்சமாகும்.

கூடவே மன அமைதியும் கிடைக்கப்பெறலாம். எனவே, போதிய இடவசதியுள்ள அனைவரும் தங்களால் முடிந்த அளவு மாடித்தோட்ட விவசாயம் செய்யும்போது, பெரிய அளவிலான இயற்கை வேளாண் புரட்சியை ஏற்படுத்துவது மட்டுமின்றி, புவி வெப்பமயமாதலையும், காற்று மாசுபாட்டையும் குறைக்க முடியும்!

பயிற்சி வகுப்புகள்!

தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை சார்பில் 500 ரூபாய் கட்டணத்தில் மாடித்தோட்டம் அமைப்பதற்கான ஒருநாள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தவிர, சில தனியார் துறையினரும், விவசாயிகளும் மாடித்தோட்டம் அமைப்பதற்கான பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றனர்.

தமிழ்நாடு தோட்டக்கலைத்துறையின் சார்பில் மாடித்தோட்டம் அமைக்க, 500 ரூபாய் மதிப்பிலான 6 `கிட்'கள் (6 பை, விதை, உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், ஒரு ஸ்பிரேயர்) வழங்கப்படுகின்றன.

மாடித்தோட்டம் டிப்ஸ்:

புதிதாக மாடித்தோட்டம் அமைப்பவர்கள் ஏப்ரல், மே போன்ற கோடை மாதங்களைத் தவிர்க்கவும்.

ஒரு பயிரின் வளர்ச்சி முடிந்ததும் அச்செடியை வேரோடு பிடுங்கி எடுத்துவிட்டு, மண்ணில் இயற்கை உரமிட்டு, பிறகு வேறு செடியை பயிரிடலாம்.

ஒரு தொட்டியில் ஒரே பயிரை மீண்டும் மீண்டும் பயிரிடாமல் மாற்றுப் பயிர்களை வளர்க்கவும்.

மொட்டைமாடியில் நீர் தேங்காமல்் பார்த்துக்கொள்ளவும்.

வீட்டின் உறுதித்தன்மை பாதிக்கப்படாது!

மாடித்தோட்டம் அமைக்கும்போது மொட்டை மாடியில் அதிக அளவிலான பாரம் கொடுக்கப்பட்டு, கீழுள்ள வீடுகளின் உறுதித்தன்மை பாதிக்கப்படுமோ என்ற அச்சம் பலருக்கும் உண்டு.

ஒவ்வொரு மண்தொட்டியுடன் கூடிய செடியும் சராசரியாக 5 - 10 கிலோ எடைக்குள்ளாகத்தான் இருக்கும்.

40 செடிகளை வளர்ப்பதால், 350 - 400 கிலோ கூடுதலான எடைதான் மொட்டை மாடியில் இருக்கும்.

40 - 50 நபர்கள் மொட்டை மாடியில் நின்றால்கூட, மொட்டைமாடி மற்றும் அதன் கீழுள்ள வீடுகளின் உறுதித்தன்மை பாதிக்கப்படுவதில்லைதானே? அதுபோலத்தான் மாடித்தோட்டத்தாலும் பாதிப்புகள் எதுவும் நேராது என்பதுடன், இதனால் மொட்டைமாடி யில் இருந்து வீட்டுக்குள் இறங்கும் வெப்பத்தின் அளவு குறைந்து, வீடு குளிர்ச்சியுடன் இருக்கும்.

வெப்பத்தைக் குறைக்கும் நிழல்வலை!

கோடையில் அதிக வெப்பத்தால் செடி, மரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படும். மாடித்தோட்டத்தில் நிழல்வலை (Shade net) அமைக்கும்போது, பயிர்களின் மீது படும் சூரிய வெப்பத்தின் அளவு குறையும். இதை அமைக்க சதுர அடிக்கு ரூபாய் 40 செலவாகும். பெஞ்ச் டெர்ரஸிங் முறைக்கும் நிழல்வலை அமைக்கலாம்.

ஆதாரம்: விகடன்

Comments

comments