வன உரிமைக்குழு முடக்கமா வன எல்லை கிராமங்களில்?

வன எல்லை கிராமங்களில் முடக்கம் – வன உரிமைக்குழு

வன எல்லை கிராமங்களில், கிடப்பில் போடப்பட்ட வன உரிமைக்குழு திட்டத்தை, மீண்டும் அரசு செயல்படுத்த வேண்டுமென, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில், உடுமலை மற்றும் அமராவதி வனசரகங்கள் உள்ளன.

இவ்விரு, வனச்சரக எல்லையொட்டிய பகுதியில், அதிகப்படியான விளைநிலங்கள் மற்றும் கிராமங்கள் அமைந்துள்ளன.

அவ்வபோது, விளைநிலங்களுக்குள் புகும் வனவிலங்குகளால், மனிதன் மற்றும் விலங்குகள் இடையே, பிரச்னை நிலவி வருகிறது.

மேலும், வனத்துறையினருக்கும், அப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் மக்களிடையே பல்வேறு, கருத்து வேறுபாடுகள், பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.

இதுபோன்ற பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கடந்த, 2008 ம் ஆண்டு, வன எல்லை கிராம மக்கள் மற்றும் மலைவாழ் மக்களை உறுப்பினர்களை கொண்ட வன உரிமைக்குழுக்கள் அமைக்கப்பட்டன.

அதில், வனத்துறை சட்டங்கள், வன எல்லை கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கிராமங்களில் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பிரச்னைகளுக்கு உரிய முறையில் தீர்வு காண, அரசுக்கு தெரியப்படுத்தும் கொள்கைகள் வகுக்கப்பட்டிருந்தன.

மேலும், வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில், குறைந்த பட்சம், பத்து மற்றும் அதிகபட்சமாக, 15 உறுப்பினர்களை கொண்ட வன உரிமைகள் குழு, கிராம சபையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

அக்குழுவில், மூன்றில் ஒரு பங்கு பழங்குடியினர் இடம் பெற்றிருந்தனர். ஒருங்கிணைந்த ஊராட்சிகளில், வன உரிமைக்குழு அமைக்கப்பட்டு, சிறப்பு கிராம சபை கூட்டம் மூலம் ஒப்புதலும் அளிக்கப்பட்டது.

வன உரிமைக்குழு முடக்கமா?

ஆனால், வனஉரிமைக் குழுக்கள் துவங்கிய குறுகிய நாட்களிலேயே, அதற்கான திட்டம் முடங்கியது.

தற்போது, வனப்பகுதியில் நிலவும் வறட்சி, மழையின்மை காரணமாக மனிதன் – வனவிலங்குகள் இடையே, மீண்டும் முரண்பாடு நிலவி வருகிறது.

இதனை தடுக்க, வன உரிமைக் குழுக்களை, உயிரூட்டமடையச் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வனப்பகுதியின் எல்லையொட்டிய கிராமப்பகுதி மக்கள் கூறுகையில், கல்லாபுரம், தேவனூர்புதூர், எலையமுத்தூர், ஆண்டியகவுன்டனூர் ஆகிய ஊராட்சிகளில் வன உரிமை குழு தேர்வு செய்யப்பட்டது.

பின், வங்கிக்கணக்கு துவங்கப்பட்டு, மேம்பாடு மற்றும் நிவாரண பணிகளுக்கான தொகை, அரசு அல்லது வனத் துறையினரால், செலுத்தப்பட்டு, வன உரிமைக்குழு மூலம் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு நிவாரணம் அளிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது.

ஆனால், வன உரிமைக் குழுக்களின் செயல்பாடு முடக்கப்பட்டது. அவ்வபோது, வனத்துறையினர் இடையே பிரச்னை நிலவுவதால், மீண்டும் வன உரிமைக் குழுவினை ஏற்படுத்த வேண்டும்,” என்றனர்.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments